10 மாதம் நிலுவைத் தொகை ரூ.2,200 கோடி உடனடியாக விடுவிக்க கோரி


  • சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் !

  • நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் ரிப்பன் மாளிகை முற்றுகை என எச்சரிக்கை !!

சென்னை,நவ.26-

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.2,200 கோடி நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, பெருநகர சென்னை ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கட்டுநர் சங்கம் முன்னாள் தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்க செயலாளர் ஆர்.ராமராவ்
ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில், சங்கத்தின் தலைவர் பழனி, நிர்வாகிகள் வி.எம்.மகேஷ், மோகன், எல்.வெங்கடேசன், கோகுலகிருஷ்ணன், ரகுநாதன், பாலாஜி, ஆர்.வி. சுரேஷ் பாபு, டி.குமார், லோகேஷ், தாமஸ் அய்யாதுரை, என்.விவேகானந்தன்,துருவாசலு, சூர்யராஜ்,எஸ்.சரவணன், கே.வடிவேலு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில், பில் நிலுவை ஏன் ? ஒப்பந்ததாரர்களுக்கு நிதி எங்கே ? பணம் இல்லாமல் பணிகளை எப்படி தொடர்வது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில், ஆர்.ராமராவ் பேசுகையில்,”
இந்த நிகழ்வில் இவ்வளவு பெரிய கூட்டமாக வந்து நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், நமது
உரிமையை நிலைநாட்ட இப்படி ஒரு போராட்டக் கூட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நிலைமை நமக்கு வராமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்கள் கோரிக்கைகள் மற்றும் கஷ்டங்கள் குறித்து
முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடப் பலமுறை முயற்சி செய்தோம், ஆனால்
அது சாத்தியமாகவில்லை. ஆகையால்,
இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
மாநகராட்சி ஆணையரைச் சந்தித்துப் பேசியபோது, அவருக்கு
எங்களின் நிலைமை முழுமையாகத் தெரிந்திருந்தது. இருப்பினும், ‘அரசின் கவனத்திற்கு
இதைக் கொண்டு சென்று அழுத்தம் கொடுங்கள், அப்போதுதான் தீர்வு கிடைக்கும்’ என்று
அவர் அறிவுறுத்தினார்.

“அரசுத்துறைச் செயலாளரை இரண்டு மூன்று முறை
நேரில் சந்தித்துப் பேசினோம். அவர் எங்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு சுமார் 100
முதல் 150 கோடி ரூபாய் வரை விடுவித்தார். ஆனால், இன்னும் சுமார் 2,200 கோடி ரூபாய்
நிலுவையில் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை மாநகராட்சியால் மட்டும் தந்துவிட முடியாது
என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தமிழக அரசு இதில் நேரடியாகத் தலையிட்டு,
எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாயையாவது உடனடியாக
விடுவிக்க வேண்டும்.

பில்டர்ஸ் சங்கத்தின் சார்பில் நாங்கள்
அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் பார்த்து, அரசு தரப்பில் ஒரு சிறு அசைவு
ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அடுத்த வாரத்தில் சுமார் 500 கோடி ரூபாய்
விடுவிக்கப்பட உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றார்.

தொடர்ந்து நிருபர்களிடம், பீஷ்மா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக, சென்னை மாநகராட்சியின்
உள்கட்டமைப்புகளை உருவாக்கிய ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கான பில்
தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் பெரும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.

பணிகளை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் பில்களைத் தயார் செய்து
கொடுத்தாலும், அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் அதை கண்டுகொள்ளாமல் கிடப்பில்
போடும் அவலம் தொடர்கிறது. அரசுகளும், அமைச்சர்களும் மாறினாலும் அதிகாரிகளின்
மெத்தனப் போக்கு மாறவில்லை. சுமார் ரூ.2,200 கோடி நிலுவைத்தொகை ஒப்பந்ததாரர்களுக்கு
வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சிறு, குறு ஒப்பந்ததாரர்கள் அதிக வட்டிக்கு பணம்
வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வரும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் இந்த அவல நிலையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல
வேண்டியது மாநகராட்சி ஆணையரின் முழு முதல் கடமையாகும். ஆனால், அதிகாரிகள்
செயல்படாமல் உள்ளனர்.

உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். இதற்காக,
மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். அதன்பிறகும் உரிய தீர்வு
கிடைக்காவிட்டால், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையைஸமுற்றுகையிடுவோம்.

தேவைப்பட்டால், இந்த 86 வயதிலும் கட்டுநர் சமுதாயத்தின் நலனுக்காகவும், அவர்களது
உரிமைகளை மீட்கவும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

படம்:

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.2,200 கோடி நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, பெருநகர சென்னை ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் அகில இந்திய கட்டுநர் சங்கம் முன்னாள் தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்க செயலாளர் ஆர்.ராமராவ் ஆகியோர் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்தப் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *