சென்னை, செங்குன்றம், தீர்த்தக்கிரியம்பட்டு, மேட்டுக்குப்பம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் இருப்பவளும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் மூன்றுவித சக்தி வடிவங்களாக திகழ்பவளும், வேண்டியோருக்கு வேண்டிய வரங்களை அருள்பவளுமான அருள்மிகு ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் ஆலயத்தில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவுற்றதை அடுத்து, பரிவார தேவதைகள் சூழ கொலு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி முத்துமாரி அம்மனுக்கு, நிகழும் மங்களகரமான ஸ்ரீ பராபவ வருடம், ஆடி மாதம் 11ஆம் தேதி, 27.07.2026 திங்கள் கிழமை, பிரயோதசி திதி, மூல நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக கன்னியா லக்னத்தில் புனராவர்த்தன ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து அம்மன் அலங்காரம், மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரவு 7.00மணிக்கு மேல் அம்மன் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆன்மீகச் செம்மல் லயன் ஏ.ஆர்.தர்மலிங்கம், D.ராணி சங்குபதி தர்மலிங்கம், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.விஜய் பிரபு, மருத்துவ பேராசிரியர் பி.சிற்றம்பலம் மற்றும் வனஜா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இராஜேஸ்வரி சிற்றம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய தர்மகர்த்தா பி.தம்பிதுரையுடன் இணைந்து ஆலய நிர்வாகிகள், கும்பாபிஷேக விழா குழுவினர், ஆலய மகளிர் குழுவினர் மற்றும் தீர்த்தக்கிரியம்பட்டு கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.