சென்னை பெரம்பூர் ஜமாலியா IIC அரங்கில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ அவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பற்றிய பத்திரிகை அறிக்கை.
திருப்பரங்குன்றம்தமிழ்நாட்டு அரசுக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள்
ஒரு வழியாக திருப்பரங்குன்றத்தில் 200 ஆண்டுகளாக நடந்து வந்த மரபுக்கேற்ப, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும், பனங்கண்டி ராமராயநிங்கார் என்கிற பனகல் அரசர் முதல் கே.காமராஜ், எம். பக்தவச்சலம் வரை, அறிஞர அண்ணா முதல் எடப்பாடி பழனிச்சாமி, மு.க. ஸ்டாலின் வரை என பல்வேறு முதல்வர்களின் ஆட்சிக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை கட்டிக்காக்கப்பட்டிருக்கிறது. சிக்கந்தர் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபத்தூணியில் தீபம் ஏற்றப்பட்டிருக்கின்றது. தர்காவின் அருகில் நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றி கலவரக்காரர்கள் மூட நினைத்த தீ தடுத்து நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடே நிம்மதியடைந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஊடகங்கள் தந்த அழுத்தம், உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக விடுத்த ஆணை, வலதுசாரி அரசியல் ஆளுமைகளின் மிரட்டல் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபின் பக்கம் அமைதியாக, உறுதியாக நின்று சாதித்திருக்கின்ற ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
உச்ச நீதிமன்றத்துடனே மல்லுக்கு நிற்கத் துணிந்ததன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கணக்குகள் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்களும் நிம்மதியும் நிறைவும் அடையச் செய்ததை ஒருபோதும் குறை சொல்ல முடியாது.
சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு அரசு நினைத்ததெனில் அதனை யாராலும் குலைத்து விட முடியாது என்பதை செவ்வாய்க் கிழமையன்று சிக்கந்தர் மலை
உச்சியில் நடந்த நிகழ்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
இந்த விவகாரத்தில் வெறுப்பு அரசியல் ஆளுமைகளைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்றது அமைதியின் பக்கம் நல்லிணக்கத்தின் பக்கம், நீதியின் பக்கம் திரண்டு நின்றது உண்மையிலேயே நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் இடைவிடாமல் களமாடிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சைவ சித்தாந்தப் பேரவை, முருக பக்தர்கள் பேரவை, மத நல்லிணக்கக் கூட்டமைப்பு, பெரியார் திராவிடர்கழகத் தோழர்கள், கம்யூனிசத் தோழர்கள், அரசியல் தலைவர்கள் என எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கின்றது.
ராகுலின் இஸ்ரேல் ஆதரவுப் பேச்சு : கண்டனங்கள்..!
சிகாகோ நகரில் நேர்காணல் ஒன்றில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கருத்துரைப்பது கண்டனத்துக்குரியதாகும்.
‘பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் எப்படி சொந்தமாக இருக்கின்றதோ, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து எப்படி சொந்தமாக இருக்கின்றதோ அப்படித்தான் பாலஸ்தீனும் அரபுகளுக்கு உரியதாகும்’ என அறிவித்து பாலஸ்தீனத்தின் உரிமைக் குரலை ஆதரித்து கட்டுரைகளை எழுதி பாலஸ்தீனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் மகாத்மா காந்தி.
பாலஸ்தீனுக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுத்தார் நேரு. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தபால்தலை வெளியிட்டு பாலஸ்தீனர்களின் மனத்தைக் குளிர வைத்தார், இந்திரா காந்தி.
ஆக, மகாத்மா காந்தி முதல் நேரு, இந்திரா வரை நமது நாடு காங்கிரஸ் தலைவர்களும் பாலஸ்தீனுக்கே ஆதரவளித்துள்ளனர். நமது நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் பாலஸ்தீனுக்கு ஆதரவான இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மனித உரிமைகள், தேசங்களின் இறையாண்மை, விடுதலை, சமூக நீதி போன்ற மாண்புகளின் அடிப்படையில்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளனர்.
இஸ்ரேலும் தொடர்ந்து நமது நாட்டு அரசியல் ஆளுமைகள் மத்தியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் முனைப்போடு இயங்கி வந்துள்ளது. இதன் விளைவாக அரை நூற்றாண்டுக்காலம் வரை இஸ்ரேலின் முழுமையான தூதரக அலுவலகம் கூட இல்லாத நிலை மாறியது. 2014 முதல் இஸ்ரேலுடனான உறவில் நெருக்கமும் பிணைப்பும் அதிகரித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகளும் தொடர்புகளும் அதிகமாயின.
அதே சமயம் சென்ற 2023 நவம்பர் முதல் கஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எழுபத்திநான்காயிரத்து எழுநூற்று நாற்பத்தியைந்து பேர் கொல்லப்பட்ட நிலையில், இருபத்தியோராயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தியாறு குழந்தைகளும், பன்னிரண்டாயிரத்து ஐநூறு பெண்களும், ஐயாயிரத்து நானூறு முதியவர்களும் கொல்லப்பட்ட நிலையில், ஐயாயிரத்து நானூறு முதியவர்களும் கொல்லப்பட்ட நிலையில் உலக அரங்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமராக இருந்த நெதன்யாஹு, பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் எந்த நாட்டுக்கும் போக இயலாதவராக முடக்கப்பட்டு இருந்தார். சின்னச் சின்ன நாடுகளும்கூட இஸ்ரேலுடன் உறவைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *